

புதுக்கோட்டையில் பரங்கிக்காய் சாகுபடி செய்து வரும் விவசாயிகளிடம் இருந்து பரங்கிக்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களைப் போதுமான விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை. பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியில் வந்து வழக்கம்போல பொருட்களை வாங்கிச் செல்ல முடியவில்லை.
இதையடுத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அரசே காய்கறிகளை வாகனம் மூலம் தெருத்தெருவாகக் கொண்டு சென்று விற்பனை செய்துவருகிறது. அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி சார்பிலும் வாகனங்கள் மூலம் தினந்தோறும் வீதி, வீதியாகச் சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில், காய்கறிச் சந்தையாக மாற்றப்பட்டுள்ள புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று (மே 16) முகக்கவசம் அணிந்து காய்கறிகளை வாங்குவதற்கு வந்த பொதுமக்களுக்கு ஒரு கிலோ வீதம் பரங்கிக்காய் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
இலவசமாகக் கிடைத்த இந்தக் காயையும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜெ.சுப்பிரமணியன் கூறுகையில், "புதுக்கோட்டை அருகே இடையப்பட்டியில் இயற்கை முறையில் பரங்கிக்காய்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இவை கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
ஊரடங்கினால் இவற்றை அங்கு கொண்டு செல்ல முடியாததால் அவரவர் தோட்டங்களில் காய்ந்து, வதங்கி வீணாவதாக புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதையடுத்து, நகராட்சி மூலம் டன் ரூ.1,500 வீதம் 20 ஆயிரம் டன் பரங்கிக் காய்கள் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட காய்கள், தினந்தோறும் காய்கறி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முகக்கவசம் அணிந்து வருவோருக்கு 1 கிலோ வீதம் காய் இலவசமாக வழங்கப்பட்டது. முதல் நாளில் 5 லோடு காய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.