Published : 16 May 2020 12:12 PM
Last Updated : 16 May 2020 12:12 PM

மணலி பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு: அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்க; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

வாயுக்கசிவு ஆபத்து உள்ளதால், தமிழகத்தில் அனைத்து ரசாயன ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை:

"சென்னையின் புறநகர்ப் பகுதியான மணலியில் உள்ள பொதுத்துறை யூரியா நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கேடுகளையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் பிற வேதிப்பொருள் ஆலைகளிலும் நிகழ்ந்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மணலி பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அடுத்த சில மணி நேரங்களில் இப்பாதிப்புகள் குறைந்துவிட்டன என்ற போதிலும் நேற்றிரவு வரை அப்பகுதிகளில் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியுள்ளது. திறந்த வெளிகளில் காய வைக்கப்பட்டிருந்த துணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமடைந்துள்ளன.

மணலி பகுதியில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதற்குக் காரணம், அப்பகுதியில் செயல்பட்டு வரும் யூரியா தொழிற்சாலை பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று மூடப்பட்ட போது, போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததுதான்.

யூரியா தொழிற்சாலையிலிருந்து மிகக் குறைந்த அளவிலேயே அம்மோனியா வாயு கசிந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விசாகப்பட்டினத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டது போன்று அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், மிக அதிக அளவில் கசிந்து இருந்தால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வேதிப்பொருள் ஆலைகள் செயல்பட்டு வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்தியாவின் வேதிப்பொருள் உற்பத்தியில் 6% தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 2,588 வேதிப்பொருள் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன.

அதிக எண்ணிக்கையில் வேதிப் பொருள் ஆலைகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் உள்ள வேதி ஆலைகளில் வாயுக்கசிவு உள்ளிட்ட எந்த விபத்துகளும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் ஆலைகள் செயல்படுவதற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டு விட்ட போதிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆலைகள் மட்டுமே செயல்படத் தொடங்கியுள்ளன.

மீதமுள்ள ஆலைகள் அடுத்து வரும் வாரங்களில் தான் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன. இதுவரை மூடப்பட்டிருந்த ஆலைகள் செயல்படத் தொடங்கும்போதோ, செயல்பட்டு வரும் ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்கும்போதோ வாயுக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 7 ஆம் தேதி மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது.

அப்போது, பாதுகாப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படாததன் காரணமாக, அந்த ஆலையில் 2,000 டன் ஸ்டைரின் வேதிப்பொருள் திரவம் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெப்பநிலை அதிகரித்து ஆவியாகத் தொடங்கியது.

ஸ்டைரின் திரவம் வாயுவாக மாறி பரவத் தொடங்கியதால், ஆலையைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். இந்த வாயுக்கசிவால் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றார்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் வேதி ஆலைகள் உள்ளன. குறிப்பாக, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆபத்தான வேதிப்பொருள் ஆலைகள் உள்ளன. எனவே, தமிழகத்தின் எந்தப் பகுதிகளிலும் வாயுக்கசிவு உள்ளிட்ட வேதி விபத்துகள் நடக்காமல் தடுக்க, இதுவரை செயல்படத் தொடங்காத ஆலைகளிலும், செயல்படத் தொடங்கிய ஆலைகளிலும் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் இந்த ஆய்வுகளை நடத்தி, அதன் மூலம் வேதி விபத்துகளைத் தடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x