

தமிழகத்தில் 50 நாட்களுக்கு மேலாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழை இலை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையான நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்தமட்டில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தூத்துக்குடி, கடலூர், தேனி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் வாழை இலை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில், பூவன், கற்பூரவள்ளி, மொந்தன், வயல் வாழை, நாட்டு மொந்தன் போன்ற வாழை ரகங்கள் இலைக்காக அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்படும் ஏறத்தாழ 1,200 முதல் 1,600 வரையிலான வாழை மரங்களிலிருந்து வாழை இலைகளை நான்கரை மாதங்களிலிருந்து அறுவடை செய்யலாம். இந்த இலைகள் ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக 200 சாப்பாட்டு இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவே முகூர்த்த நாட்கள், பிற விசேஷ நாட்களில் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டது.
வாழை இலைகளின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ரூ.400 முதல் ரூ.500 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வாழைக்காய் மற்றும் பழங்களுக்காக சாகுபடி செய்யப்படும் போது 11 முதல் 14 மாதங்கள் கழித்துதான் வருமானம் கிடைக்கும். ஆனால், இலைகளுக்காகப் பயிரிடப்படும்போது கன்று நடப்பட்ட ஏறத்தாழ நான்கரை மாதங்களிலிருந்து தினந்தோறும் தொடர்ந்து வருவானம் ஈட்டலாம்.
ஒரு ஏக்கரிலிருந்து மாதத்துக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை இலைகளிலிருந்து வருமானம் கிடைக்கும்.
ஆனால், ஊரடங்குக்குப் பிறகு வாகனப் போக்குவரத்து இல்லாமை, கூலி ஆட்கள் கிடைக்காமை, திருவிழாக்கள், திருமணம் மற்றும் இதர விசேஷங்கள் நடைபெறாமை, உணவகங்கள் திறக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களால் வாழை இலைக்கான தேவை இல்லாமல் போனது. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த வாழை விவசாயி கிருஷ்ணகுமார் கூறும்போது, "ஊரடங்குக்கு முன்பு தினந்தோறும் ஒரு ஏக்கரில் 1000க்கும் மேற்பட்ட வாழை இலைகள் வெட்டுவோம். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து வாழை இலைக்கான தேவை மெல்லக் குறைந்து, கடந்த 50 நாட்களாக முற்றிலுமாக வாழை இலை வெட்டாமல் விட்டுவிட்டோம். இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
உணவங்களிலும் பிளாஸ்டிக் பேப்பர்களில் பார்சல் கட்டுவதால், இலைக்கான குறைந்தபட்ச தேவையையும் தற்போது இல்லை. இதனால், வாங்கிய கடனைக் கூட கட்ட முடியாமலும், வாழ்க்கை நடத்த முடியாமலும் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளோம்" என்றார்.
வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டத்தைக் குறைக்க அல்லது தவிர்க்க திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, "அந்தந்த மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு போக்குவரத்து மற்றும் சந்தைகளில் வாழை இலைகளை விற்பனை செய்ய அனுமதி பெற்று அருகிலுள்ள உழவர் சந்தைகள், தற்காலிக காய்கறிச் சந்தைகள் ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். உழவர் ஒருங்கிணைப்பாளர், உற்பத்தியாளர் குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடர்புகொண்டு வாழை இலைகளை விற்பனை செய்யலாம்.
உணவகங்களில் பார்சல் உணவு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், உணவகங்களைத் தொடர்பு கொண்டு இலைகளை விற்பனை செய்யலாம்.
வாழை இலைகளை குறைந்த வெப்பநிலை உள்ள குளிர்பதனக் கிடங்குகளில் 15 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். தமிழக அரசு அறிவித்துள்ள புதிய சலுகைத் திட்டத்தின்படி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளிர்பதனக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கான கட்டணம் தற்போது கிடையாது. சேமித்து வைக்கும் பொருட்களின் மதிப்பில் ஏறத்தாழ 50 சதவீதம் வரை முன் ஈட்டுக் கடனாகவும் விவசாயிகள் பெறலாம்.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன. இத்தகைய தோட்டங்களில் 2 அல்லது 3 பக்க கன்றுகளை ஒதுக்கி, எதிர்வரும் காலங்களில் இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி, தொலைபேசி எண். 0431-2618125, மின்னஞ்சல் - directornrcb@gmail.com, வலைதளம் - www.nrcb.res.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.