Published : 16 May 2020 10:19 AM
Last Updated : 16 May 2020 10:19 AM

நிதியமைச்சர் அறிவிப்புகள்: விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு இல்லாதது வருத்தம்; கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிவாரண அறிவிப்புகளில், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், "நிதியமைச்சர் அறிவித்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் எல்லாம் நீண்டகால திட்டங்கள் ஆகும். வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் போராடுகிற விவசாயிகளுக்கு கவர்ச்சி திட்டங்களினால் உடனடியாக எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

விவசாயிகளின் வங்கி கடன் ரூ.18 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.8 லட்சம் கோடி கடனை தள்ளுப்படி செய்த நரேந்திர மோடி அரசு, விவசாயிகளின் கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன்? கார்ப்பரேட்டுகளுக்கு பரிவு காட்டுகிற மோடி விவசாயிகளை வஞ்சிப்பது நியாயமா?

நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்பு மீண்டும் பட்ஜெட் உரையை படித்ததாகவே தோன்றுகிறது. உடனடி பலனை தராத அறிவிப்புகள் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றமே.

கரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த 50 நாட்களாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு பொருளாதார திட்டத்தை மோடி அறிவித்தார். அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்காக மூன்றாம் கட்டமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 11 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் 8 அறிவிப்புகள் விவசாயம் சார்ந்ததாக கூறியிருக்கிறார் .

நிதியமைச்சரின் பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகள் விவசாயிகளின் உள்கட்டமைப்பை உருவாக்குவதாக இருக்கிறது. கொள்முதல் நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றை கட்டமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு போன்றவற்றுக்கு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே விவசாயிகளுக்கு உடனடி பலன்களை தரக்கூடிய வகையில் இல்லை. இவை நீண்டகால திட்டங்களாகும்.

ஊரடங்கின் காரணமாக தங்களது வாழ்நாளில் விவசாயிகள் இதுவரை காணாத பல்வேறு துன்பங்களுக்குத் தீர்வு காணுகிற வகையில் எந்த திட்டமும் நிதியமைச்சரின் அறிவிப்பில் இல்லை. குறிப்பாக, விவசாயிகளின் விளைபொருளுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்கிற வகையில் மத்திய சட்டம் கொண்டுவரப்படும் என்கிறார்.

விவசாயிகள் விதைக்கும் முன்பே எவ்வளவு விலை கிடைக்கும் என்கிற உறுதியை வழங்குவதற்கு வழி செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். இதை அமல்படுத்துவதற்கு எத்தகைய மந்திரத்தை கையாளப்போகிறாரோ தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மருத்துவ மூலிகை பயிர் செய்வது, தேனீ வளர்ப்பு, தேன் உற்பத்தி, பயிர் காப்பீடு திட்டம் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்கிற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல் நிதியமைச்சரின் அறிவிப்புகள் இருக்கிறது.

வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கிற விவசாயிகளுக்கு நிதியமைச்சரின் கவர்ச்சி திட்டங்களினால் உடனடியாக எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இந்த அறிவிப்புகள் வெறும் கண்துடைப்புகளாகவே கருதப்படும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக கூட்டுவோம் என்று அறிவித்த பிரதமர் மோடி இன்றைக்கு நடைமுறை சாத்தியமில்லாத புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

ஏற்கெனவே மத்திய அரசு விவசாயிகளின் விளைபொருளுக்கு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட சந்தை விலை குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் இருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்வதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

இதனால் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கபோவதில்லை. இத்தகைய நடைமுறைகள் காரணமாக விவசாயிகளின் கடன் நாளுக்கு நாள் அதிகரிக்கப்போகிறது .

நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன் சுமை 2018 ஆம் ஆண்டில் ரூ.14 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அது தற்போது 18 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. கடன் சுமையினால் தத்தளித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நிதியமைச்சரின் அறிவிப்பினால் எதோ ஒரு வகையில் நிவாரணம் கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இருந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவங்களுக்கு ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடனை நரேந்திர மோடி அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மோடி அரசு முன்வராதது ஏன்? கார்ப்பரேட்டுகளுக்கு பரிவு காட்டும் மோடி அரசு விவசாயிகளை வஞ்சிப்பது நியாயமா?

எனவே, ஒரு பக்கம் கரோனா நோயோடு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள், மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் எதுவுமே நிதியமைச்சரின் அறிவிப்பில் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. நிதியமைச்சரின் அறிவிப்பை பார்க்கிறபோது இது நிவாரண அறிவிப்பா? நிதியமைச்சரின் படஜெட் உரையா என்று நினைக்க தோன்றுகிறது" என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x