Published : 16 May 2020 07:34 AM
Last Updated : 16 May 2020 07:34 AM

தயாநிதி மாறன் மீது நடவடிக்கை தேவை; பட்டியலின மக்களுக்கு எதிரான இயக்கம் திமுக: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புகார்

பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியிருப்பது சட்டப்படி குற்றம்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கவும், அவர்களுக்கு எதிராக கொடுமைகள் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும்தான் வன்கொடுமை சட்டம் இயற்றப்பட்டது. இதை கவனத்தில் கொண்டு அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2017 பிப்.18-ல் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பேரவைத் தலைவர் பி.தனபாலின் இருக்கை மீது திமுக எம்எல்ஏக்கள் ஏறி அமர்ந்து அவமானப்படுத்தியதை தமிழகம் மறந்துவிட வில்லை. தான் ஒரு தலித் என்பதால்தான் திமுக தன்னை குறிவைத்து தாக்கியது என்று அவர் கூறியதையும் மக்கள் மறக்கவில்லை. இவை அனைத்தும், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையிலேயே அரங்கேறியது.

அதேபோல் கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்றார்.

இதன் மூலம் பட்டியலின மக்களுக்கு எதிரான இயக்கம் திமுக என்பது நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் அறிக்கை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதி திராவிடர் நல அணியின் மாநிலசெயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:

சமூகநீதிக்கு குரல் கொடுத்த தந்தை பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்ளும் ஓர்இயக்கத்தின் முக்கிய பொறுப்பிலிருப்பவர் இப்படி ஆதிக்க மனப்பான்மையில் வார்த்தைகளை வெளிப்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இன்று இவர்கள் வேண்டுமானால், இதை எளிதாகக் கடந்து போகலாம். ஆனால்காலங்காலமாக இவற்றைக் கேட்டுகொண்டு அமைதியாக போனதுபோல் இனி யாரும் போகமாட்டார்கள் என்பதை விரைவில் இவர்கள் அறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x