Last Updated : 16 May, 2020 07:32 AM

 

Published : 16 May 2020 07:32 AM
Last Updated : 16 May 2020 07:32 AM

மகாராஷ்டிரத்தில் காத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 1,328 தொழிலாளர்களை அழைத்துவர அனுமதி: மே 18-ம் தேதி தமிழ்நாட்டுக்கு ரயில் புறப்படுகிறது

தமிழகத்தில் இருந்து வேலைக் காகச் சென்று மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்ட 1,328 தொழி
லாளர்கள் முறைப்படி பெயர் பதிவு செய்து ரயிலுக்காக 7 நாட்களாக காத்துக் கொண்டிருப்பதையும், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கிடைக்காததால் அவர்களுக்கென சிறப்பு ரயில் இயக்க முடியாத சூழல் இருப்பதையும் நேற்று (மே 15) `இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் `இந்து தமிழ் திசை’ நாளிதழை தொடர்பு கொண்ட மும்பை லெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன், தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழ் தொழிலாளர்களை ரயில் மூலம் அழைத்துக் கொள்வதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு அளித்துவிட்டது. இதுதொடர்பான ஒப்புதல் கடிதம் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரிடம் இருந்து மகாராஷ்
டிர அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள் ளது. இந்தத் தகவலை மூத்த தமிழ் ஐஏஎஸ் அதிகாரியும், மராட்டிய மாநில நில அளவைத் துறை ஐஜியுமான சொக்கலிங்கம் ஐஏஎஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரயில்வே அறிவுறுத்தல்

இதைத் தொடர்ந்து தமிழ் தொழிலாளர்கள் 1,328 பேரையும் தமிழ்நாட்டுக்கு அனுப்புவதற்கான பணிகளில் தன்னார்வலர்கள் அனைவரும் இறங்கினோம்.

நாசிக், கோலாப்பூர், ரத்தினகிரி, சத்தாரா, புனே, தவுண்ட்போன்ற ஊர்களில் தங்கியுள்ள அத்தனை தொழிலாளர் களையும் மகாராஷ்டிர தொழில் வளர்ச்சிக் கழக அதிகாரிகளின் உதவியுடன் உடனடியாக புனேரயில் நிலையத்துக்கு அழைத்து வரலாமா என ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டோம். இப்போது வேண்டாம். ஏற்கெனவே சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வேறு மாநி
லங்களுக்கு ரயில்கள் செல்லவிருப்பதால், மே 18-ம் தேதிக்கு திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டனர்.

3 இடங்களில் மட்டும் அனுமதி

அதற்கேற்றபடி தமிழக அரசும் தேதி குறிப்பிடாமல் அனுமதி கடிதம் தந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு பகலில் வந்து சேரும்படி அங்கிருந்து ரயில்கிளம்ப வேண்டும் என்றும், விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை இறக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதற்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் தயாராக இருக்கிறார்கள்.
இது, தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நமது மக்கள் பிரதிநிதிகள், இந்து தமிழ் நாளிதழ் ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இந்தத் தொழிலாளர்கள் போக மேலும் ஆயிரம் பேரை தமிழகம் அனுப்ப வேண்டியுள்ளது. அவர்களில் 500-க்கும் அதிகமானோர் ரத்தினகிரியில் இருப்பதால், ரத்தினகிரியில் இருந்து நேரடியாக தமிழ் நாட்டுக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x