காவிரி டெல்டாவை வளமாக்கிய சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் உள்ள சர் ஆர்தர் காட்டனின் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் உள்ள சர் ஆர்தர் காட்டனின் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள்.
Updated on
1 min read

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன், 15.5.1803-ல் இங்கிலாந்தில் பிறந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதிக்கு 1829-ம் ஆண்டில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இவர், மணல் மேடுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். மேலும், கரிகாலச் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, அங்கு தண்ணீரைப் பிரித்து வழங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அணையைப் பலப்படுத்தினார்.

தொடர்ந்து, கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த1835-36-ம் ஆண்டுகளில் கொள்ளிடத்தின் குறுக்கே முக்கொம்பில் மேலணை, கீழணைகளைக் கட்டினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரை, வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட நீர்ப் பாசன கட்டமைப்புகளையும் கட்டி, பாசன நீரை முறைப்படுத்தினார். இவ்வாறு டெல்டா பாசனப் பகுதியை மேம்படுத்திய பொறியாளர் சர் ஆர்தர் காட்டனின் 217-வது பிறந்தநாளை முன்னிட்டு, கல்லணையில் உள்ள அவரது சிலைக்கும், அணைக்கரையில் அவரது உருவப் படத்துக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.முகில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in