

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வற்புறுத்தி அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்துவிட்டால் தொழில்துறை எவ்வாறு சிறப்பாக இயங்கும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் 4-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்குச் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சாலை நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் அவர்கள் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்து வேலையைத் தொடரலாம் என நினைக்கும்போது மாநில அரசின் செயல்பாடு தொழிற்சாலைகளை முடக்குவது போல் அமைந்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விருப்பப்பட்டு அவரவர் சொந்த ஊருக்குச் செல்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், விருப்பத்திற்கு மாறாக அவர்களை வற்புறுத்தி அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் இந்த முடிவை தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வற்புறுத்தி அழைத்து அவர்களை அனுப்பி வைப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
மாறாக தமிழக அரசு 50 நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் தொழில் துறை இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அனைத்துத் தொழிலாளர்களையும் வற்புறுத்தி அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்துவிட்டால் தொழில்துறை எவ்வாறு சிறப்பாக இயங்கும். பொருளாதாரம் எப்படி மேம்படும். எனவே இத்தகைய நிலையை கைவிடும்படி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறோம்''.
இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்.