Last Updated : 15 May, 2020 07:35 PM

 

Published : 15 May 2020 07:35 PM
Last Updated : 15 May 2020 07:35 PM

பெருந்தொற்றுக் காலம் பெருங்கொள்ளைக் காலமாக மாறிவிடக்கூடாது: ரேஷன் கடைகளில் ஆய்வு செய்த சு.வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை

மக்கள் வருமானம் இன்றித் தவிக்கும் இந்தப் பொது முடக்க காலத்திலும் மதுரை நியாய விலைக் கடைகளில் முறைகேடு நடைபெறுவதை அறிந்த சு.வெங்கடேசன் எம்பி 12 கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினார்.

தனது ஆய்வில் கிடைத்த தகவல்கள் மற்றும் முறைகேடு விவரங்களை இன்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தார் அவர். இந்த தகவல்களின் அடிப்படையில் முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அவர் ஆட்சியரை வலியுறுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இரண்டு நாட்களாக (மே 12 மற்றும் மே 14 ஆகிய தேதிகளில்) மதுரை மாவட்டத்தில் உள்ள 12 ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தினேன்; என்னோடு வருவாய்த் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுகளில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்களும் என்னிடம் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து, கரோனா பொது முடக்க காலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன; இதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

அதேபோல இனி வருங்காலங்களில் ரேஷன் கடைகளில் மக்களுக்கான பொருட்களை உரிய அளவில் விநியோகிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய வருவாய் துறை அலுவலர்களில் 50 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, ஒரு வட்டாட்சியருக்கு அடுத்த நிலையில் நான்கு வருவாய் அலுவலர் இருக்க வேண்டும் ஆனால். இப்பொழுதோ ஒருவர் மட்டுமே இருக்கிறார்.

ஆகவே இந்த காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் அல்லது 30 ரேஷன் கடைக்கு ஒரு வருவாய் துறை அதிகாரி பொறுப்பு என்று நியமிக்கப்பட வேண்டும். கறுப்பு அரிசி மீண்டும் ரேஷன் கடைக்கு வருவதற்கு தயாராக இருப்பதாக கேள்விப்படுகிறோம். அப்படிப்பட்ட அரிசி ஒரு மூட்டை கூட ரேஷன் கடைக்கு வருவதை அனுமதிக்க முடியாது.

பெரும் தொற்றுக் காலம் என்பது கொள்ளையடிப்பதற்கான பெரும் அதிர்ஷ்ட காலமாக மாறிவிடக்கூடாது, எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு கூறினார் வெங்கடேசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x