மும்பையில் இருந்து தூத்துக்குடி வந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மும்பையில் இருந்து தூத்துக்குடி வந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

மும்பையில் இருந்து வருவோரால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மும்பையில் இருந்து தூத்துக்குடி வந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலில் 27 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது.

இந்நிலையில் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரால் மீண்டும் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மும்பையில் இருந்து ஏராளமானோர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வருவோர் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றனர். அவர்களில் பலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நேற்று மட்டும் மும்பையில் இருந்து வந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில், அது 48 ஆக உயர்ந்துள்ளது. தினமும் சராசரியாக 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் பலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மும்பையில் இருந்து தொடர்ந்து ஏராளமானோர் வந்தபடி இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in