Last Updated : 15 May, 2020 06:35 PM

 

Published : 15 May 2020 06:35 PM
Last Updated : 15 May 2020 06:35 PM

வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழகத்துக்கு மழை உண்டா? 19-ம் தேதிக்குப் பின் சென்னையில் வெயில் தாக்கம் எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறினால் தமிழகத்துக்கு மழை இருக்குமா, 19-ம் தேதிக்குப் பின் சென்னையில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் நாளை மாலை புயலாகவும் மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும்போது தமிழகத்துக்கு மழை இருக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இந்து தமிழ் இணையதளத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : கோப்புப்படம்

வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா?

வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழகத்துக்கு உறுதியாக மழை கிடைக்கும் எனக் கூற முடியாது. மறைமுகமான மழை மட்டுமே கிடைக்கும். நமது அதிர்ஷ்டம், இயற்கை மனது வைத்தால் மழை கிடைக்கும்.

அவ்வாறு மழை பெய்தாலும் தமிழகத்தின் உள், மத்திய மாவட்டங்களில் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வெப்பச் சலனத்தால் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு. இந்த மழையும் நீண்டநேரம் பெய்யாமல் குறுகிய நேரம் மட்டுமே பெய்யும்.

காற்றின் போக்கின் அடிப்படையில் மேகம் உருவாகும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டவுடன் மழை பொழியும் என்பதால் குறிப்பிட்ட மாவட்டத்தில் மழை பெய்யும் எனக் கணிக்க முடியாது. கர்நாடகா, ஆந்திராவின் உள்மாவட்டங்களிலும் இந்தப் புயலால் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதற்கு முன் மே மாதத்தில் புயல் ஏற்பட்டு சென்னைக்கு மழை பெய்துள்ளதா?

இதற்கு முன் மே மாதத்தில் சென்னைக்கு அருகே ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் வந்தவரை மட்டுமே மழை கிடைத்துள்ளது. ஆனால் இப்போது உருவாகும் புயல் சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் நகர்ந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டு இருப்பதால் மழைக்கு வாய்ப்பு குறைவு.

கடந்த 2016-ம் ஆண்டு வந்த ரோனு புயல், 2010-ம் ஆண்டு வந்த லைலா புயல், 1990, 1979, 1952, 1925 ஆகிய காலங்களில் மே மாததத்தில் உருவான புயல்கள் எல்லாம் சென்னைக்கு அருகே 200 கி.மீ. தொலைவுக்கு உள்ளாக வந்ததால்தான் மழை கிடைத்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தக் காற்றில் இழுவையால் பெய்யும் மழை கேரளாவில் மட்டும்தான் பெய்யுமா அல்லது மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் மழை இருக்குமா?

இந்தப் புயல் காற்றின் ஈரப்பதத்தை இழுக்கும் பட்சத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. புயல் எங்கு செல்கிறது என்பதைப் பொறுத்து கேரளாவில் மழையின் தீவிரம் இருக்கும்.

கன்னியாகுமாரியிலும் நல்ல மழை பெய்யக்கூடும். மற்ற வகையில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் புயலால் உருவாகும் மேகக்கூட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யவே வாய்ப்பு இருக்கிறது.

19-ம் தேதிக்குப் பின் அதாவது புயல் ஆந்திராவை கடந்த பின் சென்னை, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்குமா?

நிச்சயமாக 19-ம் தேதிக்குப் பின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடைக் காலத்தில் கத்திரி வெயில் தொடங்கியபின் இதுவரை சென்னையில் 36 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் அதிகரிக்கவில்லை. ஆனால், 19-ம் தேதிக்குப் பின் 40 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரிக்கும். புயல் ஆந்திரா விட்டுக் கடந்தபின் கடற்பகுதியிலிருந்து ஈரப்பதத்தை இழுத்துச் சென்றுவிடுவதால், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.

அதீதமான வெப்பம் எத்தனை நாட்களுக்கு இருக்கும், எந்தெந்த மாவட்டங்களில் இருக்கும்?

19-ம்தேதிக்குப் பின் அதாவது ஆந்திரா ராயலசீமாவை புயல் கடந்த பின் படிப்படியாக வெப்பம் அதிகரித்து அடுத்து 5 முதல் 6 நாட்களுக்கு வெயில் உச்சமாக 40 டிகிரிக்கும் மேல் அதிகரிக்கும். அதாவது 24-ம் தேதி வரை இரவில் கூட கடல் காற்று இல்லாமல் வெப்பம் இருக்கும். இந்த வெப்பம் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிகவும் அதிகமாக இருக்கும்.

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தாமதமாகும் எனத் தகவல்கள் வந்துள்ளதே?

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் 4 நாட்கள் தாமதமாக ஜூன் 5-ம் தேதி தொடங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இன்னும் கூடுதலாக ஒருவாரம் கூட தாமதமாகலாம். ஏனென்றால், அரபிக்கடல் பகுதியில் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக மாடல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை அங்கு புயல் உருவானால் அந்தப் புயலால் கேரளாவில் பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகும். அந்தப் புயல் உருவாகவில்லை என்றால், ஜூன் 5-ம் தேதி அல்லது அதற்கு முன்போ பருவமழை தொடங்க வாய்ப்புண்டு

தமிழகத்துக்கு இந்த முறை தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?
இந்த முறை தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவமழை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். பருவமழை தொடங்கியபின் விரிவான தகவல்களைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x