

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக அதிகரித்திருக்கிறது.
வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவோரில் பலருக்கு நோய்த் தொற்று உறுதியாகி வருவதால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.
கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் 370 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் பெருங்குடி, சோமநாதபேரி, நாங்குநேரி, வாகைகுளம், மானூர், கள்ளிகுளம், மேலசெவல், ஆரோக்கியநாதபுரம், கடங்கநேரி, கீழபாப்பாக்குடி பகுதிகளை சேர்ந்த 14 பேருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.
திருக்குறுங்குடியில் மருத்துவ சோதனை மேற்கொண்ட 18 பேரில் கிழக்கு கள்ளிகுளத்தை சேர்ந்த 4 பேருக்கும், உக்கிரன்கோட்டையில் மருத்துவ சோதனையில் 15 பேரில் களக்குடியை சேர்ந்த 4 பேருக்கும், முக்கூடல் சோதனையில் ஓடைமறிச்சானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் என்று மொத்தம் 23 பேருக்கு நோய் தொற்று உள்ளது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.