

முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்த மாணவர்கள் குடும்பத்தினருக்கு பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் பலர் தங்கள் கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு புத்தாடை வாங்க சேமித்து வைத்திருந்த ரூ..2,367- ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு கடந்த மார்ச் 31ம் தேதி அனுப்பிவைத்தனர்.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தனது சொந்தச் செலவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் புத்தாடைகள் வழங்கினார். மேலும், இப்பள்ளியில் படிக்கும் 26 மாணவ மாணவிகளின் பெற்றோர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்து அவர்களுக்கு தனது சொந்த செலவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா 10 கிலோ அரிசி மற்றும், உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி, ஆசிரியை கா.ரோஸ்லினாராஜ், அங்கன்வாடி ஆசிரியை கா.மாரீஸ்வரி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.