

ஓசூர் வட்டத்தில் உள்ள 12 கிராமங்களில் மானாவாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோடை உழவுப் பணிகளை கிருஷ்ணகிரி வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர் வட்டத்தில் மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தில் கோடை உழவு அபிவிருத்தி இயக்கம் 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு மானாவாரி பஞ்சாயத்தில் 100 ஹெக்டேர் விவசாய நிலம் கொண்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுப்பில் உள்ள மானாவாரியில் பயிரிடும் விவசாயிகளுக்கு கோடை உழவு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1250 வழங்கப்படுகிறது. மேலும் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் 50 சதவீத மானியத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த நிதியாண்டில் ஓசூர் வட்டாரத்தில் ஆலூர், அட்டூர், முகளூர், பஞ்சாட்சிபுரம், கொடியாளம், கொத்தப்பள்ளி, பாலிகானப்பள்ளி, முகலப்பள்ளி, தும்மனப்பள்ளி, கனிமங்கலம், ஆலேநத்தம் மற்றும் ஆவலப்பள்ளி ஆகிய 12 கிராமங்களில் தொகுப்புகள் செயல்படுத்தப்பட்டு கோடை உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் அலேநத்தம் கிராமத்தில் நடைபெற்று வரும் கோடை உழவுப் பணிகளை கிருஷ்ணகிரி வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வுப் பணியின்போது ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் ஆர்.மனோகரன், வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.