Published : 15 May 2020 01:31 PM
Last Updated : 15 May 2020 01:31 PM

கூட்டணிக்குள் இருப்பதால் திருமாவளவனால் வாய் பேச முடியவில்லை: ஜான் பாண்டியன் சாடல்

அண்மையில் தலைமைச் செயலாளரைச் சந்திக்கச் சென்ற திமுக எம்.பி.க்கள் தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்கள். அந்தக் குழுவில் இருந்த தயாநிதி மாறன் எம்.பி., தலைமைச் செயலாளர் தங்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்துப் பேசுகையில், “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?” என்று ஆவேசம் காட்டினார். மாறனின் உணர்ச்சிமயமான இந்தப் பேச்சு பட்டியல் இனத் தலைவர்கள் மத்தியில் கடும் ஆட்சேபக் குரல்களை எழுப்பி வருகிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், ‘தலைமைச் செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அந்த வேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா' என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக, ‘திமுக எம்.பி.க்களைத் தலைமைச் செயலாளர் தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் அப்படிக் கூறியிருந்தேனே தவிர எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை’ என்று ட்வீட் செய்திருக்கிறார் தயாநிதி மாறன்.

மாறன் பேசியதையும் அதை அழுத்தமாகக் கண்டிக்காத திருமாவளவனின், ‘தோழமை சுட்டுதலை’யும் பட்டியல் இனத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், “கரோனா தொற்று அச்சம் இருக்கும் இந்த நேரத்தில், திமுக எம்.பி.க்கள் ஒரு கூட்டமாகப் போய்த் தலைமைச் செயலாளரை முற்றுகையிட்டது போல் கூடி நின்று பேசவேண்டிய அவசியம் இல்லை. தலைமைச் செயலாளர் மிகத் தெளிவாக தனது நிலையை எடுத்துச் சொல்லியும் திமுக எம்.பி.க்கள் நாகரிகமாக நடந்துகொள்ளவில்லை என்பதுதான் எனது வாதம்.

தலைமைச் செயலாளரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசியதை நானும் பார்த்தேன். அவரது கூற்றுப்படி பார்த்தால், தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்கள் என்ற அர்த்தம்தானே வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்றால் அவர்களது ஓட்டு உங்களுக்கு வேண்டாமா? பிறகு எதற்காகத் தேர்தல் நேரத்தில் வருகிறீர்கள்; வீட்டுக்கு வீடு போய்க் கட்டிப்பிடித்து போட்டோ எடுக்கிறீர்கள்?

மாறனின் பேச்சுக்கு, ‘உள்ளர்த்தம் இல்லை’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் திருமாவளவன். அதெப்படி? மனதில் உள்ளதுதானே வார்த்தையில் வரும். ஆனால், கூட்டணிக்குள் இருப்பதால் திருமாவளவனால் வாய் பேச முடியவில்லை. திமுகவுக்குக் கட்டுப்பட்டு குறுகிக் கிடக்கும் திருமாவளவனுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி பேசும் அருகதை இல்லை. இந்த விவகாரத்தை வன்மையாகக் கண்டிக்காமல் ‘தோழமை சுட்டுதல்’ என்று சொல்லி நழுவியிருக்கும் திருமாவளவனையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x