Published : 15 May 2020 01:08 PM
Last Updated : 15 May 2020 01:08 PM

ராயபுரம் பகுதியில் கரோனாவைக் கட்டுப்படுத்த தனித்திட்டம்; 70 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்று அதிகம் உள்ள ராயபுரம் பகுதியில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக, கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், இன்று (மே 15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"சென்னையில் நிலைமை சீராக உள்ளது. இன்னும் தொற்று பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பகுதி வாரியாகத் திட்டங்களை வகுத்துள்ளோம். நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் அருகாமைப் பகுதிகளில் உள்ள மக்கள் சந்தித்துக்கொள்வதால் கரோனா தொற்று அதிகம் ஏற்படுகிறது. அவர்களுக்குக் கண்கள் மற்றும் மூக்கு வழியாக நோய்த்தொற்று உண்டாகிறது.

'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பது போல் முகக்கவசம் அணிவதை மக்கள் கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். சென்னை குடிசைப் பகுதிகளில் 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வீட்டுக்குள் இருக்கும்போதும் வெளியில் செல்லும்போதும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனைப் பழக்க மாற்றங்களில் மக்கள் கொண்டு வந்து எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

சென்னையைப் பொறுத்தவரை அச்சப்படாமல், ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை மக்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ராயபுரத்தில் தொற்று அதிகமாக இருப்பதால் அதற்குத் தனித்திட்டம் வகுத்துள்ளோம். ராயபுரம் மண்டலத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் முதல்வர் உத்தரவின்படி, மக்களை சமுதாயக்கூடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், எல்லோரும் மாற வேண்டியதில்லை.

குறுகிய தெருக்கள், நோய்த்தாக்கம் அதிகம் உள்ள 10 இடங்களைக் கண்டுபிடித்து இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட இடங்கள், வீடுகள் சுத்தம் செய்யப்படும். சமுதாயக்கூடங்களில் சத்தான உணவு வழங்கப்படும்.

திடீர் நகர், ஆஞ்சநேயர் நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளும் இதில் அடக்கம். அந்தப் பகுதி மக்களுக்கு முகக்கவசம் அளித்து, சத்தான உணவு வழங்கினால் அங்கு நோய்த்தாக்கம் கட்டாயம் கட்டுப்படுத்தப்படும். இந்த உத்தியை ராயபுரம் பகுதியில் தொடங்கியிருக்கிறோம். சென்னையில் 6-7 மண்டலங்களில் நோய்த்தாக்கம் குறையத்தொடங்கியுள்ளது.

கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளும் சவாலான பகுதிகள். அங்கு கபசுரக் குடிநீர், 'ஹெல்த் டிரிங்க்', வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை மண்டல அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அங்கு இன்னும் விரிவாக இவை செயல்படுத்தப்படும். ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருவிக நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில், நோய்த்தாக்கம் நிலையாக இருக்கிறது. அங்கு நோய்த்தடுப்புப் பகுதிகளில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

குடிசைமாற்று வாரியத்தின் 2,000 குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணர்வு, நோய் உள்ளதா எனக் கண்டறியும் பணி ஆகியவை ஆரம்ப சுகாதார நிலையம், சமூக சுகாதார மையம் ஆகியவை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட நோய்த்தடுப்புப் பகுதிகளில் தாக்கம் குறைந்ததால், அவை தளர்த்தப்பட்டுள்ளன.

சென்னையில் 80% பேருக்கு அறிகுறிகளே இல்லை. நோய் பாதிக்கப்பட்ட 70 சதவீதத்தினர் 20-60 வயதுக்குள்ளேயே உள்ளனர். சென்னையில் 65 வார்டுகளில் இதுவரை 10க்கும் குறைவாகவே நோயாளிகள் உள்ளனர் என்பது நல்ல விஷயம். 77 வார்டுகளில் 30க்கும் குறைவாகவே நோயாளிகள் உள்ளனர். குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்றும் நாளையும் சேர்ந்து 250 பேர் வீடு திரும்ப வாய்ப்புள்ளது. இவையெல்லாம் நல்ல செய்திகள்.

புரையேறினால் கூட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள் என சில பெண்கள் பயந்து என்னிடம் கூறினர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

இந்தியாவிலேயே சென்னையில்தான் 70 ஆயிரத்துக்கும் மேலான நபர்களைப் பரிசோதித்திருக்கிறோம். மொத்தமாக 1 விழுக்காடு மக்கள்தொகையை நாம் பரிசோதித்துவிட்டோம். வேறு எந்த இடங்களிலும் இவ்வளவு பரிசோதனை செய்யவில்லை.

21 மாவட்டங்களில் புதிதாக நோய்த்தாக்கம் இல்லை என்ற நிலையில், அங்கு ஒட்டுமொத்தமாக சோதனைகளைக் குறைத்ததை சென்னைக்கும் குறைத்ததாக, எண்ணம் வேண்டாம்.

பல்துறை அதிகாரிகளும் 24 மணிநேரம் பணிபுரிந்து வருகின்றனர். 30 ஆயிரம் களப்பணியாளர்கள் உள்ளனர். 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கை எங்களின் களப்பணியாளர்களுக்கு உள்ளது.

கண்ணகி நகரில் தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாகத் தொற்று ஏற்படும் பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் சவாலாகவும் உள்ளது. இது ஒரு வைரஸ் கிருமி, நோயல்ல.

முகக்கவசம் அணிந்தால் யாருக்கும் ஆபத்தில்லை. வாடகைக்கு முகக்கவசம் வாங்குவது, புதிதாக வாங்கும்போது கடைகளில் தொங்கவிட்டதை எடுப்பது ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் பலமுறை பயன்படுத்தப்படக்கூடியவை. இது ஏழை, எளிய மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன".

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x