

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வு, கரோனா தடுப்புப் பணி குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை திமுக எடுத்து வருகிறது. அரசுக்கு திமுக சொன்ன யோசனைகளையும், அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்த கோரிக்கையையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதே நேரம் திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் இவை அனைத்தையும் இணைத்து 'ஒன்றிணைவோம் வா' என்ற ஒரு அமைப்பின் மூலம் உதவிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒரே ஹெல்ப் லைன் எண் மூலம் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இணைப்புகள், அவற்றில் வரும் அழைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் மூலம் அந்தந்த மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் பகுதி, கிளை அளவில் நிவாரணம் செல்கிறது.
பின்னர் அதே முறையில் மீண்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிளைச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் வழியாக மாவட்டச் செயலாளர்கள் மூலம் மாநிலத் தலைமைக்கு வருகிறது. இவை அனைத்தையும் ஸ்டாலின் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதில் வந்த உதவி கேட்பு அழைப்புகளை வகைப்படுத்தி திமுக அளித்த உதவிகள் போக, அரசு செய்யவேண்டிய உதவிகளின் பட்டியலை தலைமைச் செயலரிடம் நேற்று முன் தினம் அளித்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தகட்ட நடவடிக்கை, கரோனா நிவாரணப் பணி மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை கூட்டப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு:
“திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (16-5-2020) சனிக்கிழமை, காலை 10:30 மணி அளவில், எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கரோனா காலத்தில் திமுக செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்''.
இவ்வாறு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.