

டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைப் பிற துறைகளிலிருந்து பெறுவதற்கு 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது வாதத்தைத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கத் தடை கோரிய வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவும், ஆன்லைன் மூலமாக மட்டுமே மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக, தமிழக அரசு தனியாக பதில் மனுத்தாக்கல் செய்ய முழு அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (மே 15) இரண்டாவது நாளாக வழக்கு விசாரணை தொடங்கியபோது அரசுத் தரப்பில் பதில் தாக்கல் செய்யப்படவில்லை.
அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமெனவும், அதே சமயம் மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் நேற்று வைத்த வாதங்களுக்குப் பதில் வாதங்களை முன்வைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையேற்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட அனுமதித்ததுடன், வாதங்கள் இன்று நிறைவடையாத பட்சத்தில் திங்கள் கிழமையும் விசாரணை நடைபெறும் என அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தொடங்கிய பதிலுரையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், டாஸ்மாக் மதுபான விற்பனைக்குப் பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 அல்லது 5 ஆண்டுகளாகும் எனவும் வாதத்தை முன்வைத்துள்ளார்.