கரோனா தொற்று ஏற்பட்ட சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத்தொகை; அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் 34 பேருக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக, 9,674 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 447 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,240 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 80 ஆயிரத்து 23 பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலேயே சென்னையில் அதிகம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,637 பேர் சென்னையில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் 34 பேருக்கு கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் வேலுமணி இன்று (மே 15) தன் ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் 34 பேருக்கு கருணைத்தொகையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in