எனக்கு மதுரையில் ஒரு தங்கை இருக்கிறாள்!- பார்த்திபன் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த முடிதிருத்துநர்

எனக்கு மதுரையில் ஒரு தங்கை இருக்கிறாள்!- பார்த்திபன் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த முடிதிருத்துநர்
Updated on
1 min read

மதுரை அண்ணாநகர் மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன், தன் மகள் நேத்ராவின் படிப்புச் செலவுக்காக வங்கியில் சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை அப்பகுதி மக்களின் நிவாரணத்துக்காக செலவிட்டு வரும் செய்தியை அறிந்து நடிகர் பார்த்திபன் மோகனுக்குப் பாராட்டுத் தெரிவித்திருப்பதோடு, அந்த மாணவியின் ஓராண்டுக்கான படிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி முடிதிருத்துநர் மோகனிடம் கேட்டபோது, “அண்மையில் நடிகர் பார்த்திபனின் மனிதநேய மன்ற நிர்வாகிகள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு, ‘உங்களை பார்த்திபன் சார் பாராட்டினார்’ என்று சொன்னார்கள். கொஞ்ச நேரத்திலேயே பார்த்திபன் சார் என்னைத் தொடர்புகொண்டார். எடுத்தவுடனேயே, ‘எப்படி இருக்கிறாள் என் அன்புத் தங்கை’ என்று கேட்டார். ஒரு நிமிடம் திகைத்துப் போனேன்.

‘மோகன், எனக்கு மதுரையில் ஒரு தங்கை இருக்கிறாள். அதுதான் உங்கள் மகள் நேத்ரா. இந்த வயதிலேயே அவளது மனிதநேயச் சிந்தனையை அறிந்து வியந்து போனேன். ’இந்து தமிழ்’ நாளிதழை வாசித்ததுமே அவளைப் பார்க்க மதுரைக்கே நேரில் வந்திருப்பேன். ஆனால், விமானம், ரயில், பஸ் என்று எதுவும் ஓடவில்லை. எல்லாம் சரியானதும் ஒருமுறை கண்டிப்பாக வருகிறேன். அவளுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள். என் தங்கைக்கு உதவ வேண்டியது என் கடமை’ என்று சொன்னார். பிறகு எனது மகளிடமும் போனில் பேசிப் பாராட்டினார்.

அவர் பேசியதைத் தொடர்ந்து, பார்த்திபன் மனிதநேய மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எனக்கும், என் மனைவிக்கும் பட்டு வேட்டி, பட்டுப்புடவை, மகள் நேத்ராவுக்குப் புத்தாடை, பழங்கள், இனிப்புகள் கொண்டுவந்து கொடுத்துத் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். பார்த்திபன் சார் ரொம்ப நல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது இந்தப் பாராட்டு என்னையும் என் குடும்பத்தினரையும் ஊக்கப்படுத்தி இருக்கிறது.

நான் வசிக்கும் அண்ணாநகரில் நிறைய கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவ இது ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார் மோகன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in