Published : 15 May 2020 11:07 AM
Last Updated : 15 May 2020 11:07 AM

கைது செய்யப்பட்ட காசி: சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி பெண்கள் ஏமாறக்கூடாது; விஜயகாந்த் அறிவுரை

விஜயகாந்த் - கைது செய்யப்பட்ட காசி: கோப்புப்படம்

சென்னை

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி தொடர்பான வழக்கில் யாரும் ஆஜராகக் கூடாது என்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரின் அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக, விஜயகாந்த் இன்று (மே 15) வெளியிட்ட அறிக்கையில், "பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்கின்ற காசி தொடர்பான வழக்கில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது என்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

இதுபோன்று பெண்களை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையில் விளையாடும் கயவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் காசிக்கு கடும் தண்டனை வழங்கி, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்காத வண்ணம் அந்த தண்டனை மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும்.

மேலும், ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த இந்த முடிவை தேமுதிக சார்பில் வரவேற்பதோடு, அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வழக்கறிஞர்கள் இதே உறுதியோடு இருந்தால் தமிழகம் எங்குமே இதுபோன்ற கொடிய செயல்கள் நடக்காத வண்ணம் பலவகையான செயல்களை தடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

அதேநேரத்தில், பெண்களும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப், போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாறக்கூடாது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்ற பழமொழிக்கு ஏற்ப போலியானவர்களை கவனமாக கண்டறிந்தால் மட்டுமே பெண்கள் தங்கள் வாழ்க்கையை தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், போக்சோ சட்டத்தின்கீழ் பெண்கள் மோசடி மன்னன் காசியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x