

தலைமைச் செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்புப் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மே 13-ம் தேதி அன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கச் சென்றனர் திமுக எம்.பிக்கள். இதில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது தங்களை தலைமைச் செயலாளர் அவமானப்படுத்தி விட்டதாக திமுக எம்.பிக்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தனர்.
முதலில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு நடந்தவற்றை விவரித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது "This is the problem with you people" என்று தலைமைச் செயலாளர் எங்களைப் பார்த்துச் சொன்னார். இதற்கு என்ன அர்த்தம் தயா என்று தயாநிதி மாறனிடம் கேட்டார். அதற்கு "எங்களை மூன்றாம் தர மக்களைப் போல் நடத்தினார். அந்த வார்த்தையை வாயில் சொல்ல முடியவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களா?" என்று விளக்கமளித்து பின்பு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசினார் தயாநிதி மாறன்.
தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு, திமுக கூட்டணி கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் தனது சமூக வலைதள பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
"நேற்றைய தினம் (13.05.20) தமிழக அரசின் தலைமைச்செயலாளரைச் சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின் போது, தலைமைச் செயலாளர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில் தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்