Published : 15 May 2020 07:30 AM
Last Updated : 15 May 2020 07:30 AM

கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 3 லட்சம் களப்பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும் - உயரதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிள் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதில் அவர் பேசியதாவது:

மாநிலம் முழுவதும், கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 3 லட்சத்து 28 ஆயிரத்து 834 களப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் உள்ளிட்ட 658 அம்மா உணவகங்களில் ஊரடங்கு காலத்தில் தினமும் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் என இதுவரை 2 கோடியே 53 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமுதாய சமையலறைகள் மூலம் மாநிலம் முழுவதும் 39.17 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் 60 லட்சம் முகக் கவசங்கள், 80 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி மற்றும் 60 ஆயிரம் லிட்டர் கைகழுவும் திரவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் த.ந.ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x