10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Updated on
1 min read

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோட்டில் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கைகளால், இந்திய அளவில் கரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்துள்ளது. யூடியூப், கல்விச்சேனல், மத்திய அரசின் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் ஒருமணி நேரம் பாடம் கற்க முடியும்.

இப்பணி தொடர்ந்து நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எழுதுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மே19-ம் தேதி தெளிவான விளக்கம் அளிக்கப்படும்.

மாணவர் நலன் கருதி, பெற்றோர் நிலை கருதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதனை பரிசீலித்து முதல்வர்தான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார்கள். குஜராத், கேரள மாநிலங்களில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் முடிவுற்று விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நிலையில் உள்ளது.

தேர்வு மையங்களை பார்வையிடுதல், மாணவர்கள் பத்திரமாக தேர்வு எழுதி, வீடு திரும்பும் வரையிலான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆகவே, அதைப்பற்றி எந்த அச்சமும் படத்தேவையில்லை.

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு இரு வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது முடிந்தவுடன் நீட் தேர்வு பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 3,000 மாணவர்கள், 10 கல்லூரிகளில் தங்கி நீட் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு உணவு வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in