

திருமழிசை காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருமழிசை சந்தையில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் ஆட்சியர்கூறும்போது, ‘‘வெளியில் இருந்து சந்தைக்கு வரும் அனைத்து வாகனங்களும் பொருட்கள் இறக்கப்பட்டவுடன் அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட வேண்டும். மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கடை உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, பொது மக்களுக்கு இடையூறாக நடைபாதைகளில் பொருட்களை வைத்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.
சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்காத உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும். முகக்கவசம் அணியாமல்வந்த 62 பேரிடம் இதுவரை ரூ.6,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில்முகக்கவசங்கள் அணியாதவர்களிடம் ரூ.200 வீதம் அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மண்டல காவல் துணை தலைவர் தேன்மொழி, திருவள்ளுர் காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.