

ஊரடங்கு எப்போது வரை செல்கிறதோ அதைப்பொறுத்து பொருளாதார பாதிப்பு ஆய்வு செய்யப்படும் என்று தமிழக அரசின் பொருளாதார மேம்பாட்டுக்கான உயர்மட்டக் குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.
தமிழக அரசின் பொருளாதார மேம்பாட்டுக்கான உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டம், கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பொருளாதார பள்ளி வளாகத்தில் அதன் தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், குழுவின் உறுப்பினர்கள் 23 பேர் பங்கேற்றனர். கூட்ட முடிவில் குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு துறைக்கும் துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பொருளாதார மேம்பாடு தொடர்பான ஆய்வுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் இடைக்கால அறிக்கை கொடுக்கலாம். அதைப்பற்றி இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. 3 மாதங்களில் அறிக்கை கொடுக்க வேண்டும். தற்போது, எவ்வளவு தூரம் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மேம்பாட்டுக்கு உடனே செய்ய வேண்டியது என்ன, 2 அல்லது 3 ஆண்டுகளில் செய்ய வேண்டியது என்ன, பொருளாதார சீர்திருத்தங்களாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நாங்கள்தற்போது கூட்டத்தில் ஆலோசித்தோம்.
மேலும், இந்த ஊரடங்கு எப்போது வரை செல்கிறதோ, அதைப்பொறுத்து பாதிப்பு எவ்வளவு இருக்கும். அதில் இருந்து எவ்வளவு சீக்கிரம் நாம் முன்னேற முடியும் என்பதும் எங்கள் குழுவின் ஆய்வாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.