

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்த வழக்கில் 18 பேர் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்து அறிவித்தது. அரசின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்து கடந்த மே 6-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் மது வாங்குவதற்கு கடைகளில் கூட்டம் திரண்டது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதாக மனுதாரர்கள் முறையீடு செய்ததையடுத்து, ஊரடங்கு முடிவுக்கு வரும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி உத்தரவிட்டது. இதனால், திறக்கப்பட்ட இரண்டே நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதேபோல மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மே 8-ல் பிறப்பித்த உத்தரவு இந்த வழக்குகளுக்கும் பொருந்தும் என தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தனித்தனியாக 3 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. இதேபோல டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களான வழக்கறிஞர்கள் ராஜேஷ், கே.பாலு, மகளிர் ஆயம், மக்கள் அதிகாரம், மக்கள் நீதி மய்யம் கட்சி ஆகிய வற்றுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், தேமுதிக கட்சிகள் என மொத்தம் 18 பேர், தங்களது தரப்பு வாதங்களையும் கேட்கக் கோரி கேவியட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (15-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.