

எரித்துக் கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட 40 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் வசிக்கும் ஜெயபாலிடம் கொண்ட முன் விரோதம் காரணமாக அப்பகுதி அதிமுக பிரமுகர்கள் ஜெயபாலின் 15 வயது மகளை எரித்துக் கொன்றனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்புக்குள்ளானது. அவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. கைதான இருவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ.1 லட்சமும், விசிக சார்பில் ரூ.1 லட்சமும், திமுக சார்பில் ரூ.50 ஆயிரமும் அக்குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பாஜக மாநிலத் தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சென்றனர். அவர்கள் கும்பலாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக ஒன்று கூடி வந்ததால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்ட 40 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.