

சென்னையில் இருந்து சொந்த கிராமங்களுக்கு அதிகமானோர் வருவதால் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குமரியில் கரோனா தொற்று எண்ணிக்கை 31 ஆக உயர்ந்ததால் மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்கத்தில் கரோனா தொற்றால் 16 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனால் குமரி ஆரஞ்சு மண்டலமாக மாறியது. சுகாதாரத்துறையினர், காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை நடவடிக்கையால் கரோனா தொற்று இல்லாமல் குமரி மாவட்டம் இருந்தது.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக சென்னை, மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தோர் சொந்த கிராமங்களுக்கு இ-பாஸ் அனுமதியுடன் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி அதன் அருகே அண்ணா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று பரிசோதனை மையத்தில் பரிசோதித்து பின்னர் அனுப்புகின்றனர்.
இதில் ஏற்கெனவே 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் சென்னையில் இருந்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த மயிலாடியைச் சேர்ந்த 65 வயது முதியவர் கரோனா தொற்றால் மரணமடைந்தார். அவருடன் வந்த மகளை முதலில் பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இல்லை. தற்போது வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்த அவரை மீண்டும் பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுளளார்.
இதைப்போல் சென்னையில் இருந்து குமரி மாவட்டம் ஆளூருக்கு வந்த கணவன், மனைவி, அவர்களின் இரு குழந்தைகளின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது அவர்கள் 4 பேருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒரே நாளில் சென்னையில் இருந்து வந்த 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை, மற்றும் பிற பகுதிகளில் இருந்து குமரி வருவோரால் அதிகமான கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குமரியில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 31 பேராக உயர்ந்துள்ளது. 16 பேர் குணமாகி வீடு திரும்பியிருந்த நிலையில் பச்சை மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட குமரி மாவட்டம் சிவப்பு மண்டலமாக மாறும் தருவாயில் உள்ளதால் சுகாதாரத்துறையினர், மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.