புதிய இயல்பு நிலைக்குத் திரும்பிய மதுரை: ஜவுளி, செருப்புக் கடைகள் திறக்கப்பட்டன

மதுரையில் திறந்துள்ள ஜவுளி மற்றும் செருப்புக்கடைகள் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரையில் திறந்துள்ள ஜவுளி மற்றும் செருப்புக்கடைகள் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

தமிழ்நாடு முழுவதும் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலில் இருந்த பொதுமுடக்கம் மே 11-ம் தேதி முதல் தளர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி டீக்கடை தொடங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் கடை வரையிலான 34 கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் புத்தகக் கடைகள், பாத்திரக் கடைகள், முடிதிருத்தும் கடைகள், செருப்புக் கடைகள் போன்றவை இடம் பெறவில்லை.

ஆனால், மதுரை மாவட்டத்தில் புத்தகக் கடை, பாத்திரக்கடை, எழுதுபொருள் விற்பனைக் கடைகளையும் திறந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மதுரை புதிய இயல்பு நிலைக்குத் (New Normal) திரும்பியது. வழக்கம்போல சாலைகளில் கார், பைக்குகள் இயங்கின. அரசுப் பேருந்துகள் மட்டும் இயங்கவில்லை. கடைகளில் கூட்டம் இருந்தாலும் ஓரளவுக்கு தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மக்கள் பொருட்களை வாங்கினார்கள்.

இந்த நிலையில் இன்று முதல், ஜவுளி மற்றும் செருப்புக் கடைகளையும் திறந்துகொள்ள ஆட்சியர் அனுமதித்திருக்கிறார். இதனால் காலை 10 மணி முதல் அந்தக் கடைகளும் செயல்படத் தொடங்கிவிட்டன. நேற்று (புதன்கிழமை) மதுரை விளக்குத்தூண் பகுதியில் செயல்பட்ட 3 ஜவுளிக் கடைகளுக்கும் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்ட 3 ஜவுளிக் கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அதே நேரத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்னமும் ஜவுளிக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. பேருந்து நிலையம் அருகே திறந்திருந்த டீக்கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளை போலீஸாரும், நகராட்சி அதிகாரிகளும் மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in