கோடைக்காலங்களில் அதிகம் விற்பனையாகும் தென்னந்தட்டிகள் ஊரடங்கால் முடக்கம்: தொழிலாளர்கள் வேதனை

சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியில் தென்னந்தட்டி முடையும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியில் தென்னந்தட்டி முடையும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Updated on
1 min read

சிவகங்கை அருகே ஊரடங்கால் கோடைக்காலங்களில் அதிகம் விற்பனையாகும் தென்னந்தட்டிகள் முடங்கின. இதனால் தட்டிகள் முடையும் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை, ராஜகம்பீரம், கூட்டுறவுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு கிடைக்கும் தென்னங்கீற்றை விலைக்கு வாங்கி தட்டி முடையும் தொழிலில் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அவர்கள் தென்னங்கீற்றை ரூ.5க்கு வாங்கி, அதனைத் தண்ணீரில் நனைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தட்டியைப் பின்னுகின்றனர். இரண்டு மட தட்டி, மூன்று மட தட்டி என இரண்டு விதமாக முடைகின்றனர். இதன்மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 தட்டிகள் வரை பின்னுகின்றனர்.
ஆண்டு முழுவதும் அவர்கள் தட்டி முடைந்தாலும் கோடைக்காலத்தில்தான் தட்டிகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

இரண்டு மட தட்டியை ரூ.100 முதல் ரூ.150க்கும், மூன்று மட தட்டியை ரூ.150 முதல் ரூ.200க்கும் விற்கின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீசனில் தட்டிகள் விற்பனையாகவில்லை. தட்டிகள் தேக்கமடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தட்டி முடையும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவுப்பட்டியைச் சேர்ந்த தட்டி முடையும் தொழிலாளர்கள் கூறுகையில், ''கோடைக் காலத்தில் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கத் தட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். ஊரடங்கால் தட்டிகளை வாங்க யாரும் தயாராக இல்லை. இதனால் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள தட்டிகள் காய்ந்து வீணாகி வருகின்றன. இதனால் எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் செய்தாலும் தட்டிகளை வாங்க யாரும் தயாராக இல்லை'' என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in