

‘காந்தியவாதி சசிபெருமாளின் மகளின் கல்வி செலவு முழுவதை யும் பாமக ஏற்றுக் கொள்ளும்’ என சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் இளம் பிள்ளை அருகே இடங்கணசாலை மேட்டுக்காட்டைச் சேர்ந்த காந்தி யவாதி சசிபெருமாள் பூரண மதுவிலக்கு கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்தார். அவரது உடல் மேட்டுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரது நினைவிடத்தில் நேற்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சசிபெருமாள் மனைவி மகிளம் மற்றும் குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, சசிபெருமாள் மகள் கவியரசியின், கல்விச் செலவு முழு வதையும் பாமக ஏற்றுக் கொள்ளும் என அவரது குடும்பத்தினரிடம் உறுதியளித்தார்.
பின்னர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியது:
பூரண மதுவிலக்கு கேட்டு சசிபெருமாள் சென்னையில் 33 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ், சசிபெருமாளை நேரில் சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து அவரும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால், தற்போது யார், யாரோ மதுவிலக்கு கேட்டு பேசுகின்றனர். சசிபெருமாள் மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். திமுக பூரண மதுவிலக்கு அறிவித்திருப்பது தேர்தலுக்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் ரா.அருள், தமிழரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.