Last Updated : 14 May, 2020 04:59 PM

 

Published : 14 May 2020 04:59 PM
Last Updated : 14 May 2020 04:59 PM

வரும் நாட்களில் திருப்பூரில் வேலைவாய்ப்புகள் குறையும்: தொழில் துறையினர் கணிப்பு

வரும் நாட்களில் பின்னலாடைத் துறையில் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு குறையும் சூழல் இருப்பதால், தொழிலாளர்கள் இருக்கும் வேலைகளைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் இந்தியாவின் பின்னலாடைத் துறை உற்பத்தி கேந்திரமாக உள்ள நகரம். இங்கு 'ஜாப் ஆர்டர்' கையாளும் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சுமார் 10 ஆயிரம் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

திருப்பூரைப் பொறுத்தவரை வேறு எந்த நகரங்களைக் காட்டிலும், இங்கு எங்கு திரும்பினாலும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவை என்ற அறிவிப்புப் பலகைகளைக் காண முடியும். ஏற்கெனவே 10 லட்சம் தொழிலாளர்கள் இருந்த போதிலும், தொழிலாளர்கள் பற்றாக்குறை என்பது எப்போதும் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்தது. ஆனால், இதே வேலைவாய்ப்பு சூழலை வரும் நாட்களில் திருப்பூரில் காண இயலுமா என்றால் இல்லை என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

43 நாட்களுக்குப் பிறகு...

கரோனா வைரஸ் பரவலால் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு மற்றும் தடை உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. 43 நாட்களுக்குப் பிறகு கடந்த மே 6-ம் தேதி நிபந்தனைகளுடன் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டது.

வெளிமாநிலத்தவர் ஊர் திரும்புதல்

ஏற்கெனவே பின்னலாடைத் துறையின் முதுகெலும்பாகக் கருதப்படும் வெளிமாவட்டத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்ட நிலையில், திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாநிலத்தவர் உட்பட எஞ்சிய சில லட்சக்கணக்கான தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை மேற்கொள்ள தொழில் துறையினர் திட்டமிட்டுச் செயல்பட்டனர்.

ஆனால், திடீரென வெளிமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பான்மையினர் தற்போது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு செல்லத் தொடங்கியுள்ளது, தொழில் துறையினருக்கு ஆர்டர்களை எடுப்பதற்கான சாம்பிள் தயாரிப்பது தொடங்கி பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி பாதிப்பில்லை

வெளிமாநிலத்தவர்களின் ஊர் திரும்புதல் திருப்பூர் தொழில் துறையினருக்குப் பிரச்சினைதான் என்றாலும், அது தங்களை உடனடியாகப் பாதிக்காது என்கின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் 'இந்து தமிழ் திசை'யிடம் கூறியதாவது:

"திருப்பூரிலிருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது அவரவர் விருப்பம். வெளிமாநிலத் தொழிலாளர்களின் வெளியேற்றம், திருப்பூர் பின்னலாடைத் துறையைப் பாதிக்கும். ஆனால் உடனடியாக இல்லை.

பின்னலாடைத் துறையின் பிரதான தொழிலாளர்களான வெளிமாவட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தற்போது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். விரைவில் தமிழக அரசு பேருந்துகளை இயக்கும்போது அவர்கள் வேலைக்கு வந்து விடுவார்கள். இதனால் போதிய தொழிலாளர்கள் கிடைத்து விடுவார்கள்.

திருப்பூரில் வேலைவாய்ப்பு குறையும்

அதே நேரத்தில் உலகச் சந்தை தத்தளித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் சர்வதேச நாடுகளில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆர்டர்கள் நிச்சயமாக எப்போதும்போல் இருக்கப் போவதில்லை. ஒரு லட்சம் துணிகள் ஆர்டர் கிடைத்த இடங்கள், சர்வதேச வர்த்தகர்களிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் என்ற அளவிலேயே ஆர்டர்கள் கிடைக்கப் போகின்றன. இதனால் 1,000 தொழிலாளர்கள் பணிபுரிந்த நிறுவனங்களில் 600 பேர் போதும் என்ற நிலை வரப்போகிறது. வேலைவாய்ப்பும் குறையும்.

மீண்டும் தொழில் துறை பழைய நிலைக்கு வர மேலும் 6 மாதங்கள் வரை ஆகலாம். அப்போது ஆர்டர்கள் அதிகரித்து, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும்போதே, தற்போதைய வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெளியேற்றம் எங்களைப் பாதிக்கும்.

எங்களைப் பொறுத்தவரை கரோனாவுக்குப் பிறகு நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியவுடன், தற்போது திருப்பூரில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். வெளிமாநிலத்தவர்களோ, உள்ளூர் தொழிலாளர்களோ அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் நாட்கள் கடினமாக இருக்கும் என்பதால் இருக்கும் வேலைகளைத் தொழிலாளர்கள் தக்க வைத்துக் கொள்வது நல்லது".

இவ்வாறு ராஜா எம்.சண்முகம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x