கண்ணகி நகரில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு 

கண்ணகி நகரில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு 
Updated on
2 min read

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறுபயன்பாட்டுடன் கூடிய துணியாலான 50 இலட்சம் முகக்கவசங்கள் வழங்கும் பணியினை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். கண்ணகி நகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 650 குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 26 இலட்சம் மக்களுக்கு மறுபயன்பாட்டுடன் கூடிய துணியாலான 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கும் பணியினை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று (14.05.2020) சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகரில் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195, சுனாமி நகர், கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 23,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஒவ்வொருவருக்கும் மறுபயன்பாட்டுடன் கூடிய 6 முகக்கவசங்கள் மற்றும் கைகழுவும் திரவம் இன்று வழங்கப்பட்டன.

பின்னர் வருவாய் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள மக்களிடையே கரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைவரும் கட்டாயம் இந்த முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும், ஒருவருக்கொருவர் இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனவும், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் எனவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் கண்ணகி நகர் பகுதியில் நேற்று மட்டும் 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மொத்தம் 27 நபர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளது. இந்த பகுதியில் 13 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் நாள்தோறும் சென்று சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கண்டறிய 150 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பின்படி காய்ச்சல் அறிகுறி இருந்த 4 நபர்களுக்கு வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருவதையும், கடைகளில் இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்குவதையும் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டு வியாபாரிகளும் அதனை ஏற்றுக்கொண்டனர். நாள்தோறும் ஆட்டோக்கள் மூலம் ஒலிப்பெருக்கி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றிற்கு தகுந்தவாறு பகுதிவாரியாக திட்டமிட வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களின் அறிகுறிகளின் தன்மைக்கேற்ப அவர்களை கண்காணித்து தேவைப்படின் வேறு இடத்திற்கு கொண்டு செல்லவோ (அ) இதே பகுதியில் உள்ள கோவிட் காப்பு மையங்களில் தங்க வைத்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் காப்பு மையங்களுக்கு கொண்டு சென்ற பின்னர் அவர்களது குடும்பங்களை சார்ந்த மற்றும் தொடர்புடைய குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை பாதுகாக்கும் பொருட்டு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளபடி, தனியாக திருமண மண்டபங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான சத்தான உணவுகள், அடிப்படை வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களுக்கு வைரஸ் தொற்று குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கொண்டு எளிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு குழு அலுவலர் பாஸ்கரன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் (பொ) சந்திரகலா, தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஷ், உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கோடம்பாக்கம் மண்டலம் மற்றும் இராயபுரம் மண்டலங்களுக்கு சென்று அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in