Published : 14 May 2020 04:14 PM
Last Updated : 14 May 2020 04:14 PM

நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏழை எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை; பசி, பட்டினியால் வாடும் மக்கள் கிளர்ந்தெழும் நிலை ஏற்படும்: காங்கிரஸ் எச்சரிக்கை

வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கிற வகையில் எந்த அறிவிப்பும் நிதியமைச்சரின் திட்டத்தில் குறிப்பிடாதது கடுமையான கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“முக்கிய அம்சங்கள்

1. பிரதமரின் 20 லட்சம் கோடி தொகுப்பில் 30 சதவீதம் மட்டுமே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2. மத்திய அரசின் முரண்பட்ட நிலையால் லட்சக்கணக்கான தொழில்கள் முடக்கம்

3. ரூ. 50 ஆயிரம் கோடி வரையிலான நிதியிழப்பை ஈடுகட்டவே இந்த அறிவிப்பு உதவும்.

4. வேலையிழந்த தொழிலாளர்களின் சம்பளம் உறுதி செய்யப்படவில்லை.

5. பசி, பட்டினியால் வாடும் மக்கள் கிளர்ந்தெழும் நிலை ஏற்படும்

6. நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி, மத்திய அரசுக்கு 50 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும்

கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 52 நாட்கள் உருண்டோடிவிட்டன. இந்திய பொருளாதாரம் இதுவரை காணாத வகையில் கடும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் பொருளாதார பாதிப்பை ஈடுகட்ட ரூ.20 லட்சம் கோடி தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ரூ.7.8 லட்சம் கோடியாக இருந்த கடன்தொகை ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் வரிவருவாய் கடுமையாக குறைந்திருக்கிறது. இந்நிலையில் தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு பொருளாதார திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

நிதியமைச்சரின் அறிவிப்பின்படி குறு, சிறு,நடுத்தர தொழில்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதனால் 45 லட்சம் சிறு, குறு, நடுத்த தொழில்கள் பயன் அடையும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இந்தியாவில் மொத்தம் 6.3 கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் உள்ளன. இதில் 11 கோடி பேர் வேலை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் கடந்த 3 மாதங்களாக வேலை இழந்து, சம்பளம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது சம்பளத்தை உறுதி செய்கிற வகையில் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல பொருளாதார கண்காணிப்பு மைய அறிவிப்பின்படி வேலைவாய்ப்பின்மை 27 சதவீதமாக அதிகரித்துள்ளது. 12 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 9 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள்.

இவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு எந்த விதமான நிவாரணத்தையும் நிதியமைச்சர் அறிவிக்கவில்லை. மேலும் கடன் உத்தரவாதம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் ரூ. 6 லட்சம் கோடி அளவில் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார இழப்பை ஈடுகட்ட எந்த வகையிலும் வழிவகுக்காது. ரூ. 20 ஆயிரம் கோடி முதல் ரூ. 50 ஆயிரம் கோடி வரையிலான நிதியிழப்பை ஈடுகட்டவே இந்த அறிவிப்பு உதவும்.

பிரதமர் மோடி ரூ. 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு அறிவிப்பை நீர்த்துப்போவதாக நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் உள்ளன. ஏனெனில் இவரது அறிவிப்பின்படி மத்திய அரசுக்கு பொருளாதார இழப்பீடு இந்த ஆண்டு ரூ. 50 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சமீப காலத்தில் இந்தியாவில் சமூக அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கிற வகையில் 14 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனை நாடு முழுவதும் தலைவிரித்தாடி வருகிறது.

முன்னறிவிப்பின்றி 4 மணி நேர இடைவெளியில் அறிவிக்கப்பட்ட சமூக ஊரடங்கினால் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப போக்குவரத்து வசதி இல்லாமல் நெடுஞ்சாலைகளில் தலையில் மூட்டை முடிச்சுகளுடன், இடுப்பில் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு நடைபயணமாக சென்றது அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக இருந்தது.

பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு முதல்முறையாக இந்த அவலக்காட்சியை பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 50 நாட்களுக்கு பிறகு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ரயில்வேத்துறை மூலமாக மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான தொழில்கள் மீண்டும் தொடங்க முடியாத நிலையும், வேலைக்கு ஆளில்லாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க தொகுப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கிறது.

இன்னொருபக்கம் வேலைசெய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புகின்ற நிலை. இந்த முரண்பட்ட நிலையினால் லட்சக்கணக்கான தொழில்கள் தொடங்க முடியாத நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய அவல நிலைக்கு மத்திய பாஜக அரசின் அலட்சியப்போக்கு தான் காரணமாகும்.

பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பில் வெறும் 30 சதவீதத்தை மட்டுமே நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதாவது, மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும். இதனால் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற சலுகைகளால் உடனடியாக எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்ற ஏமாற்றத்தை தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பினால் பொருளாதார ரீதியாக குறு,சிறு, தொழில்கள் மீண்டும் உடனடியாக தொடங்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. வரலாறு காணாத பொருளாதாரப் பேரழிவை சந்தித்துவரும் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துகிற வகையில் பிரதமர் மோடியின் ரூ. 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்பு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கிற வகையில் எந்த அறிவிப்பும் நிதியமைச்சரின் திட்டத்தில் குறிப்பிடாதது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்நிலை நீடிக்குமேயானால் பசி, பட்டினியால் துடித்துக்கொண்டிருக்கிற கோடிக்கணக்கான மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x