Published : 14 May 2020 01:47 PM
Last Updated : 14 May 2020 01:47 PM

திமுக எம்.பி.க்களை அவமதித்ததாக தலைமைச் செயலாளருக்கு முத்தரசன் கண்டனம்

இரா.முத்தரசன் - தலைமைச் செயலாளர் சண்முகம்: கோப்புப்படம்

சென்னை

நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களை தலைமைச் செயலாளர் சண்முகம் அவமதித்ததாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 14) வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் நேற்று (மே 13) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை, அவரது அலுவலகத்தில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று நேரில் சந்தித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுகவின் தலைவர், சில வாரங்களாக நடத்தி வரும் 'ஒன்றிணைவோம் வா' என்ற இயக்கத்தின் மூலம் பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கை விண்ணப்பங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, அந்தக் கோரிக்கை விண்ணப்பங்களை, கட்சியின் முன்னணித் தலைவர்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் தலைமைச் செயலாளர் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், தலைமைச் செயலாளர் சண்முகம், அவர் வகிக்கும் அந்தப் பொறுப்புக்கு தக்கபடி நடந்து கொள்ளாமல், தனது தாழ்ந்த தரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது அறையில் இருக்கும் தொலைக்காட்சியை அளவுக்கு மீறிய சப்தத்தில் வைத்து, தலைவர்கள் பேசுவதைக் கேட்க மறுத்துள்ளார்.

கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகள் பற்றி தலைவர்கள் கூறியதை காதில் வாங்காமல் 'கரோனா நோய்த் தொற்று என்பது மக்கள் தொடர்புடைய பிரச்சினை. அதை அரசு பார்த்துக் கொள்ளும். அதுபற்றிக் கவலை வேண்டாம்' என்று ஏளனப்படுத்தியுள்ளார்.

இந்த அணுகுமுறை நாகரிகம் அல்ல என்று சுட்டிக் காட்டியபோது 'என்ன வெளியே போய் ஊடகங்களைச் சந்திப்பீர்கள், அங்கே என்ன வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள், கவலை இல்லை' என்று இறுமாப்பு காட்டியுள்ளார்.

தலைமைச் செயலாளர் 'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது; இதில் அர்த்தம் உள்ளது' என்ற கண்ணதாசன் பாடலை மறந்து விடக் கூடாது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்பான எதிர்கட்சித் தலைவர்களை அரசு அலுவலர்கள் அணுக வேண்டிய மரபுகளை நிராகரித்து, அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள அரசு உயர் அலுவலர் தலைமைச் செயலாளர் சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மறுத்து, அநாகரிகமாக நடந்து கொண்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x