

விழுப்புரம் அருகே நடந்த பள்ளி மாணவி கொலை வழக்கின் அறிக்கை ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது என, எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு எரித்துக் கொல்லப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக, அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன், அதிமுக கிளைச் செயலாளர் யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய இருவரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸில், "இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட கொடூரக் குற்றவாளிகள் மீது 2015-ம் ஆண்டின் சிறார் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சிறுமிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விவரங்கள், சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் வழக்கின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை 7 நாட்களுக்குள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து எஸ்.பி. ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "பள்ளி மாணவி கொலை வழக்கில் எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முறையாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை எந்த வகையில், யார் விசாரணை மேற்கொண்டாலும் காவல்துறை கைது செய்தவர்களே குற்றவாளிகள் எனத் தெரியவரும்" என்றார்.