

கரோனாவை முன்னிட்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, அதாவது 25.3.2020 முதல் 12.5.2020 வரையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை இந்திய உணவுத்துறை (எஃப்சிஐ) வெளியிட்டிருக்கிறது.
இதன்படி தமிழ்நாட்டுக்கு 0.24 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5.04 லட்சம் மெட்ரிக் டன் அரிசி என மொத்தம் 5.28 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை விட மிக அதிகமாக உத்தரப் பிரதேசத்துக்கு 25.60, பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு முறையே 10.69, 10.30, 10.46, 9.41, 9.12, 7.83, 8.03, 5.63 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
25.3.2020-ம் தேதி நிலவரப்படி, இந்திய உணவுத் துறையின் கையிருப்பில் 642.7 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் இருந்ததாகவும், அதில் இதுவரையில் 60.87 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவிலேயே 6-வது பெரிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால், உணவு தானிய ஒதுக்கீட்டு பெற்ற வரிசையில் தமிழ்நாடு 10-வது இடத்தில் இருக்கிறது. அதாவது, நம்மைவிடக் குறைந்த மக்கள்தொகை கொண்ட ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் நம்மைவிட அதிக உணவு தானியங்களைப் பெற்றிருக்கின்றன.