

வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை பெற்றோரிடமிருந்து எப்படி நாசூக்காக வசூலிப்பது என்று தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கையில் கோ.சிவசண்முகம் கரோனா களத்தில் நிற்கிறார். இவரும் ஒரு பள்ளிக்குத் தாளாளர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூரில் 200 மாணவர்கள் மட்டுமே பயிலும் சிறிய பள்ளிதான் இவரது பள்ளி. ஆனால், பெரிய மனதுக்குச் சொந்தக்காரர். தாய், தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, இருவர் படித்தால் ஒருவருக்கு மட்டுமே கட்டணம், சீருடை உட்பட அனைத்தும் இலவசம், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைத் தவிர வேறு எந்த மறைமுகக் கட்டணமும் கிடையாது என இவரது தயாள குணப் பட்டியல் நீள்கிறது.
இப்போது பள்ளியின் சேர்க்கை நேரம், கட்டண வசூலில் கறார் காட்டவேண்டிய கட்டாயம். ஆனால், அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லாமல் வறியவர்களின் வாட்டம் போக்க பள்ளியின் ஊழியர்களோடு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறார் சிவசண்முகம். கரோனா பொதுமுடக்கத்தால் வாடியிருக்கும் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சலவைத் தொழிலாளிகள், முடிதிருத்துவோர், மூட்டை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளிகள், ஆதரவற்றவர்கள், திருநங்கைகள் என தேடித்தேடிப் போய், தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கிவருகிறார் சிவசண்முகம். இதுவரை இவரிடம் உதவி பெற்றோர் எண்ணிக்கை 650க்கும் அதிகம். இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்.
நிவாரண உதவிகள் வழங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மக்களுக்குக் கபசுரக் குடிநீர் வழங்குவதிலும் அக்கறை காட்டுகிறார். அத்துடன், பாபநாசம் தொடங்கி தஞ்சாவூர் வரைக்கும் வேனில் சென்று வழிநெடுகிலும் மக்களைக் காக்கும் பணியில் இருக்கும் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு, தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், வெள்ளரிக்காய் போன்றவற்றையும் வழங்கி வருகிறார்.
இத்தனைக்கும் இவர் பெரிய வசதிக்காரர் இல்லை. வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். மற்றவர்களிடமிருந்து பெற்றே மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் கேட்டால் இயன்றதைச் செய்ய ஏராளமானவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
“உதவணும்கிற எண்ணம் சின்ன வயசுலேர்ந்து வந்தது. வறுமையில் வாடியிருக்கேன், பத்தாம் வகுப்புவரை பள்ளியில் மதிய உணவு. பன்னிரண்டாம் வகுப்புவரை ஒரே ஒரு சீருடைதான் இருந்தது. பரங்கிக்காயை வீடு வீடாகப் போய் விற்றுவந்து அந்தக் காசில் அரிசி வாங்கிச் சாப்பாடு சமைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். இப்படி இளமையிலேயே வறுமையை உணர்ந்தவன் என்பதால் உதவுறதும் என்னோட குணமாயிடுச்சு.
பத்தாவது படிச்சுக்கிட்டு இருக்கறப்ப குஜராத் பூகம்பம் வந்துச்சு. அங்க வீடு, வாசலில்லாம கஷ்டப்படற மக்களுக்காக நிதி திரட்டினப்ப, நானே பத்தாயிரம் ரூபாய் திரட்டிக் கொடுத்தேன். அதுக்குப் பிறகு இயற்கைப் பேரிடர்கள் வரும்போதெல்லாம் இயன்றதைச் செய்தேன். கேரள மழை வெள்ளம், சென்னை பெருவெள்ளம், கஜா புயல்னு அனைத்திலும் எங்களுடைய நிவாரணப் பங்களிப்பு கொஞ்சம் இருந்தது.
என்னால பெரிய அளவு செலவு செய்ய முடியாது. வரவுக்கும் செலவுக்குமே சரியா இருக்கும். உதவி செய்யவேண்டும் என்கிறபோது என்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போடுவேன். அதைப் பார்த்துவிட்டு உடனே உதவிகள் வர ஆரம்பித்து விடும். ஒவ்வொரு நாளும் யார் யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள், அதிலிருந்து யார் யாருக்கு உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன... அதற்கு எவ்வளவு செலவாகியிருக்கிறது, மீதம் எவ்வளவு? போன்ற விவரங்கள் ஃபேஸ்புக்கில் ஏற்றப்பட்டு விடும்.
பொதுமுடக்கம் அறிவித்த முதல் பத்து நாட்கள் எல்லோரையும் போல நானும் வீட்டிலேயே முடங்கித்தான் இருந்தேன். எங்கள் பகுதி கிராமங்களில் வருடப் பிறப்பை (சித்திரை 1) சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு பொதுமுடக்கத்தால் எல்லோருக்குமே வருவாய் இழப்பு ஏற்பட்டு ஒருவித சோகம் சூழ்ந்திருந்தது. வருடப் பிறப்பு நாளில் அவர்கள் வடை, பாயசத்தோடு சாப்பிட வேண்டும் என்று முகநூலில் பதிவிட்டேன். உடனே, நண்பர்கள் உதவினார்கள்.
அரிசி, பருப்பு, சோப்பு, உள்ளிட்ட அத்தனை பொருட்களும் வாங்கி 100 பேருக்குக் கொடுத்தோம். அவர்கள் அன்றைய தினம் வயிறார உண்டு மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த உதவிகளைப் பார்த்துவிட்டு நண்பர்கள் தொடர்ந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர். அதனால் தினம்தோறும் பொருட்கள் வாங்குவது, அதைக் கொடுப்பது என்று வேலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
எங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான். மனைவி, வலங்கைமானில் உள்ள அவரது தாய் வீட்டில் இருக்கிறார். இருமுறை போய்ப் பார்த்தேன். அதற்குப் பிறகு நாற்பது நாளாயிற்று; போய்ப் பார்க்கவேயில்லை. என் ஆசை மகனை இன்னும் அணைத்துத் தூக்கவே இல்லை. அதைவிட முக்கியமாக ஆதரவற்றவர்களின் துயரைத் துடைக்கும் மாபெரும் கடமை இருக்கிறது. மனைவியும், மகனும் என்னைப் புரிந்து கொள்வார்கள்.
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கு- என்பது நல்ல வாசகம்தான். ஆனால், இயலாதபோதும் எதையாவது செய்யவேண்டும் என்பதுதான் என் லட்சியம்” என்கிறார் சிவசண்முகம்.