கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 10 லட்சம் டன் உரம் விநியோகம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 10 லட்சம் டன் உரம் விநியோகம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்
Updated on
1 min read

நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 10.3 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் விநியோகிக்க திட்டமிடப் பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு உர விநியோகம் செய்வது தொடர்பாக உர நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் சென்னை கோட்டையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது:

கடந்த 2011 முதல் இதுவரை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 41 லட்சத்து 79 ஆயிரத்து 127 விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரத்து 281 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. உரிய காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு முழு வட்டியும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவை யான ரசாயன உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடனின் ஒரு பகுதியாகவும், ரொக்க விற்பனையாகவும் விநியோகிக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 23 லட்சத்து 73 ஆயிரத்து 577 மெட்ரிக் டன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 10.3 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

காவிரி டெல்டா பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகளுக்குத் தேவையான டிஏபி, யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உட்பட அனைத்து உரங்களும் தடையின்றி வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெய முரளிதரன், மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆ.இளங்கோவன், கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் எல்லப்பட்டி எம்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள் ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in