Published : 14 May 2020 10:59 AM
Last Updated : 14 May 2020 10:59 AM

திமுக எம்.பி.க்களுக்கு அவமரியாதை; தலைமைச் செயலாளரின் மரபை மீறிய பண்பாடற்ற செயல்; வைகோ கண்டனம்

தலைமைச் செயலகத்தில் திமுக எம்.பி.க்களுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (மே 14) வெளியிட்ட அறிக்கையில், "திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 'ஒன்றிணைவோம் வா' செயல் திட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு உதவிகளை நாடி அழைப்பு விடுத்துள்ளனர்.

திமுகவின் சார்பில் கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து வந்துள்ள ஒரு லட்சம் கோரிக்கைகளை தமிழக அரசிடம் நேரில் முன் வைப்பதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று (மே 13) மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் சென்றது.

தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஒப்படைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

தலைமைச் செயலகம் என்பது சாதாரண மக்கள்கூட தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்கும் முகாமையான இடம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இதுதான் நிலை எனில், எளிய மக்களிடம் அதிகார வர்க்கம் எப்படி நடந்துகொள்ளும்? இதுபோன்ற பண்பாடற்ற, நெறிகெட்ட மரபு மீறிய செயல்களை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது.

மக்கள் பிரதிநிதிகளிடம் குறைந்தபட்ச மரியாதையைக்கூட காட்டாமல், மிகுந்த ஆணவத்துடன் நடந்துகொண்ட தலைமைச் செயலாளர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x