Published : 14 May 2020 10:52 AM
Last Updated : 14 May 2020 10:52 AM

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; தினகரன் வலியுறுத்தல்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 14) வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு பணிகளுக்காக குவைத், மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் கரோனா ஊரடங்கால் அங்கங்கே சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

விசா காலம் முடிந்து பொது மன்னிப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், பெருந்தொற்று நோய் பாதிப்பால் வேலையிழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சரியான உணவு, இருப்பிட வசதிகள் இன்றி குவைத்தில் தவித்து வருகின்றனர்.

ஒரே இடத்தில் பலரையும் அடைத்து வைத்திருப்பதால் கரோனா தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோமா என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று மாலத்தீவுகளில் சிக்கிய தமிழக தொழிலாளர்களை அழைத்து வரும் முயற்சி, எடப்பாடி பழனிசாமி அரசின் பாராமுகத்தால் பாதியிலேயே நின்றுவிட்டதாக வரும் செய்தியும் வருத்தமளிக்கிறது.

வெளிநாடுகளில் மட்டுமின்றி அந்தமான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கூலி வேலைகளுக்குச் சென்ற தமிழர்களும் சொல்ல முடியாத துயரங்களோடு அங்கே தவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மற்ற மாநில நிர்வாகங்கள், தங்கள் மக்களை அழைத்துவரச் செய்யும் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகாவது நமது மாநில அரசும் அப்படி செயல்பட்டிருக்க வேண்டாமா?

எனவே, இனியும் தாமதிக்காமல் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஏற்கெனவே சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வருவதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

மேலும், அவர்களில் பலர் ஊருக்குத் திரும்புவதற்கான பயணச்செலவுக்குக் கூட பணமில்லாமல் தவிப்பதால் தமிழக அரசே அதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

போக்குவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை உணவு, தங்குமிடம், மருத்துவம் ஆகிய அவசர உதவிகள் தமிழக தொழிலாளர்களுக்கு கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x