

மதுபானக்கடைகளை மூடக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பி்த்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளை பின்பற்றி கடைகளை திறக்க கடந்த மே 6 அன்று அனுமதியளித்தது. அதன்பிறகு நிபந்தனைகள் மீறப்பட்டதால் மதுபானக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் கடந்த மே 8 அன்று உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இதேகோரிக்கையை வலியுறுத்தி போனிபாஸ், செல்வக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த மே 11 அன்று, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இந்த வழக்குகளுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டுள்ளது.
தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுபானக்கடை தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் இன்று (மே 14) தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு விசாரிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.