திருச்சி தெப்பக்குளம் பகுதி வியாபாரிகளின் எதிர்ப்பால் அனைத்து ஜவுளி கடைகளும் அடைப்பு: சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதியில் தரைக்கடைகளும் மூடல்

திருச்சி தெப்பக்குளம் பகுதி வியாபாரிகளின் எதிர்ப்பால் அனைத்து ஜவுளி கடைகளும் அடைப்பு: சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதியில் தரைக்கடைகளும் மூடல்
Updated on
1 min read

திருச்சி மெயின்கார்டு கேட் பகுதி யில் உள்ள கடைவீதிகளில் அனைத்து ஜவுளி கடைகளும், சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி யில் தரைக்கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன.

ஊரடங்கு தளர்வையொட்டி திருச்சி மாநகரில் குறிப்பிட்ட நேரம் வரை பல்வேறு வகையான கடைகள் இயங்கி வருகின்றன. ஏசி வசதி உள்ள கடைகளும் ஏசி இயக்கப்படாமல் திறந்து வைக்கப் பட்டிருந்தன.

இதனிடையே சிங்காரத்தோப்பு, தேரடி பஜார், பெரிய கடைவீதி உள்ளிட்ட இடங்களில் தரைக் கடை கள் இயங்கி வரும் நிலையில், என்எஸ்பி சாலை, தெப்பக்குளம், நந்தி கோயில் தெரு ஆகிய பகுதி களில் தரைக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால், இந்தப் பகுதி தரைக் கடை வியாபாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று திடீரென தெப்பக்குளம் பகுதியில் தரைக் கடைகளை வியாபாரிகள் திறந் தனர்.

தகவலறிந்து வந்த போலீஸார், கடைகளை மூடுமாறு கூறினர். இதற்கு தரைக் கடை வியாபாரிகள் மறுப்பு தெரிவித்ததுடன், கடை வீதியின் ஒரு பகுதியில் தரைக் கடைகள் அமைக்க அனுமதி அளித்துவிட்டு, மற்றொரு பகுதியில் அனுமதி மறுப்பது பாரபட்சமான நடவடிக்கை என்றும் அரசு நிர்ணயித்த நேரத்தைக் கடந்தும் ஜவுளி கடைகள் செயல்படுவதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, பெரிய கடைவீதியில் இருந்த அனைத்து ஜவுளி கடைகளும் மற்றும் சிங்காரத் தோப்பு, தேரடி பஜார், பெரிய கடைவீதி உள்ளிட்ட இடங்களில் இருந்த தரைக் கடை களும் மூடப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியபோது, “உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் கடைவீதி பகுதியில் இருந்த அனைத்து விதமான ஜவுளி கடைகளும், தரைக் கடைகளும் அடைக்கப் பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in