Published : 07 Aug 2015 08:52 AM
Last Updated : 07 Aug 2015 08:52 AM

மழைநீர் கால்வாயில் விழுந்து குழந்தை பலி: ஆவடி நகராட்சி மீது பொதுமக்கள் புகார்

ஆவடியில் கழிவுநீர் கால்வாயாக உருமாறியுள்ள மழைநீர் கால்வாயில் ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து பலியானதற்கு ஆவடி பெரு நகராட்சியின் அலட்சியம் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆவடி கன்னிகாபுரம் - மேட் டுத் தெருவில் சீனிவாசன்- பாக்ய லெட்சுமி தம்பதி வசிக்கின்றனர். நேற்று முன் தினம் இரவு அந்தக் குடியிருப்புப் பகுதிக்கு வந்த தனியார் குடிநீர் லாரியில் தண்ணீர் பிடிக்க பாக்யலெட்சுமி குடத்துடன் சென்றபோது, அவருடன் அவரது ஒன்றரை வயது மகள் ஜனனியும் சென்றுள்ளார். அப்போது மழைநீர் கால்வாயில் ஜனனி தவறி விழுந்தார். அரை மணி நேரத்துக்கு மேலாக குழந்தை ஜனனியைத் தேடி மீட்ட அப்பகுதி மக்கள் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி உயிரிழந்தார். இதுகுறித்து, ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

‘‘ஆவடி நகராட்சிப் பகுதியில், கனரக வாகன தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், பருத்திப்பட்டு ஏரியில் கலக்கும் வகையில் 6 கி.மீ. தூர மழைநீர் கால்வாய் இருந்து வருகிறது.

ஆவடி பஸ் மற்றும் ரயில் நிலையம், புதிய ராணுவ சாலை, கன்னிகாபுரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் வழியாக செல்லும் இந்த மழைநீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறிவிட்டது. குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் மழைநீர் வடிகால்வாயின் மேற்பகுதியினை சிமென்ட் சிலாப்புகளால் மூடவேண்டும் என ஆவடி பெருநகராட்சி நிர்வாகத் திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆனால் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தியதன் விளைவாக தற்போது ஒன்றரை வயது குழந்தையின் உயிர் பறிபோய்விட்டது’’ என பொது மக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x