

அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 160 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து, வேலையில்லாமல் வீடு திரும்பிய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்ததில், கரோனா தொற்று உள்ளவர்களை அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களிலும் தங்க வைத்தனர். தொற்று இல்லாதவர்களை வீட்டுக்கு அனுப்பி தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவக்குழுவினர் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணப்பில் இருந்தவர்களில் அரசு தலைமை மருத்துவமனையில் 30 நபர்களும், அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 3 குழந்தைகள் உட்பட 38 நபர்களும், ராயம்புரம் அரசுப் பள்ளியில் 64 நபர்களும், ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் 28 நபர்களும் என மொத்தம் 160 நபர்கள் பூரண குணமடைந்து இன்று (மே 13) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நோயிலிருந்து குணமடைந்ததற்கான சான்று மற்றும் பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறையினர் வழங்கினர். இதில், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.
மேலும், மேற்கண்ட நபர்கள் மருத்துவர்களின் அறிவுரையின் படி 14 நாட்கள் தனிமையில் அவர்களது வீடுகளில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 344 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 243 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.