மாலத்தீவில் இருந்து கப்பலில் அழைத்துவரப்பட்ட தென் மாவட்ட தொழிலாளர்கள் நெல்லையில் தனிமைப்படுத்தப்பட்டனர்

மாலத்தீவில் இருந்து கப்பலில் அழைத்துவரப்பட்ட தென் மாவட்ட தொழிலாளர்கள் நெல்லையில் தனிமைப்படுத்தப்பட்டனர்
Updated on
1 min read

மாலத்தீவிலிருந்து கடற்படை கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ள தென்மாவட்ட தொழிலாளர்கள் 26 பேர் பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாலத்தீவில் ஹோட்டல் பணியாளர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்றிருந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 50 நாட்களாக வேலையின்றியும், சரியான உணவு கிடைக்காமலும் அவதியுற்றனர்.

இதுபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தவித்துவந்த நிலையில் அவர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக இந்திய கடற்படை கப்பல் மாலத்தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்த இந்திய தொழிலாளர்கள் கொச்சி துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

அங்கிருந்து திருவனந்தபுரம் வழியாக தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்ட தென்மாவட்ட தொழிலாளர்கள் 26 பேர் பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுக்குப்பின் தொற்று இல்லையென்றால் அவர்களது சொந்த ஊர்களுக்கு இத் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக மாலத்தீவில் வேலைக்கான ஊதியம் கிடைக்காமலும், சரியான உணவின்றியும் தவித்துவந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in