

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியைச் சேர்ந்த 5 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தேனி மாவட்டத்தில் நேற்று வரை 66 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 42 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர்.
மீதம் 23 பேர் தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஓடைப்பட்டியைச் சேர்ந்த 5 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பெற்றோர், மகன், மருமகள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17வயது பெண்ணிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு சென்றுவந்த லாரி டிரைவர் மூலம் இப்பகுதியில் பலருக்கும் கரோனா பரவி வருவது குறிப்பிடத்தக்கது.