Published : 13 May 2020 08:15 PM
Last Updated : 13 May 2020 08:15 PM

மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகள்; பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்: வாசன் நம்பிக்கை

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள், பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொருளாதாரத்தையும் படிப்படியாக மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 13) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் போக்குவதற்காக பிரதமர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் படிப்படியாகப் பயன்தருகிறது.

அந்த வகையில் நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி அறிவித்ததை அடுத்து இன்று மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கும் பல்வேறு அறிவிப்புகள் வரவேற்புக்குரிவை.

அதாவது, கரோனா நோய் காரணமாக நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்றைக்கு மத்திய நிதித்துறையின் அறிவிப்புகளில் மிக முக்கிய நோக்கமாக தன்னிறைவு பெற்ற நாடாக, வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, சுயசார்பு இந்தியாவை உருவாக்க பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்து பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவற்றை மையமாக வைத்து பொது சிறப்பு தொகுப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கவும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி பிணையில்லாமல் வழங்கவும், கடனை 4 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் போது முதல் ஆண்டில் தவணை வசூல் செய்யப்படாது என்பதும், நலிவடைந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதும், வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி செய்ய ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்குவதும், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையைப் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க பேருதவியாக இருக்கும்.

இப்படி சிறு, குறு நடுத்தர தொழிலுக்கு நிதி ஒதுக்குவதால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும், தொழில் செய்பவர்களும் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கும், தொழில் நடத்துவதற்கும் பலன் தரும்.

மிக முக்கியமாக சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கான முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதும், ரூ.200 கோடி வரையிலான அரசு டெண்டர்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருப்பதும் உள்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்கும் பயனளிக்கும்.

மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்துத் தொகையும் இன்னும் 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்பதும் தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றும். அதேபோல, கடந்த 3 மாதங்களுக்கு பி.எஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று தெரிவித்த வேளையில் இப்போது அடுத்த 3 மாதங்களுக்கும் பி.எஃப் தொகையை அரசே செலுத்தும் என்பதால் சுமார் 3.67 லட்சம் நிறுவனங்கள் பயன் பெறும்.

சுகாதார ஊழியர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கவும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ. 90 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கவும், கட்டுமானப் பணிகளுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கவும், வருமான வரி தாக்கல் செய்ய 4 மாத காலக்கெடு விதித்து, டிடிஎஸ் வரி விதிப்பில் 25 சதவீதக் குறைப்பு செய்யவும் அறிவிப்புகள் வெளியாகியிருப்பது பலதரப்பட்ட மக்களுக்குப் பயன் தரும்.

வரி விதிப்பில் 25 சதவீதம் குறைப்பு என்றால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதற்கு வழிவகுக்கும். இன்றைய அறிவிப்புகளால் சிறு, குறு நடுத்தர தொழில் துறையினரும், உள்கட்டமைப்புப் பணியில் ஈடுபடுவோரும், பொதுமக்களும் முன்னேற்றம் அடைவார்கள்.

மொத்தத்தில் நாடு ஊரடங்கால் அடைந்துள்ள பாதிப்பில் இருந்து மீள பிரதமரின் நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து இன்று வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொருளாதாரத்தையும் படிப்படியாக மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x