

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்திய தமிழக அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயிற்றில் ஈரத்துணியை கட்டி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார்.
மாவட்டத்தலைவர் விஷ்ணுவர்த்தன் முன்னிலை வகித்தார். அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வயிற்றில் அடிக்காதே, ஓய்வு பெறும் வயது 59 என்ற அரசாணையை தமிழக அரசு திரும்பபெறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வயிற்றில் ஈரத்துணி கட்டியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர்.